அரசு நிலத்தை முறைகேடாக பட்டா பெற்றவர்களுக்கு முன்ஜாமீன்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு நிலத்தை முறைகேடாக பட்டா பெற்றவர்களுக்கு முன்ஜாமீன் வழஙகி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது;
தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலம் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் உதவியாளராக இருந்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்டோருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் மாநில அளவில் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏராளமான அரசு அதிகாரிகளும் சிக்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த சண்முகம் தனக்கு முன்ஜாமீன் கோரி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வடமலை விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஆஜராகி, நிலமற்ற ஏழைகளுக்கான திட்டத்தின் கீழ் கடந்த 2008-ம் ஆண்டில் மனுதாரர் பட்டா பெற்றார். தற்போது 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இந்த முறைகேட்டிற்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்பு இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, நாள்தோறும் காலை 10.30 மணிக்கு தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். இதே வழக்கில் பாக்கியம், செந்தில் உள்ளிட்ட 5 பேருக்கும் நீதிபதி தமிழ்செல்வி இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.