ரிப்பன் மாளிகை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை

சென்னை ரிப்பன் மாளிகை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-17 06:13 GMT

பயங்கரவாத தாக்குதலின் போது அதை பொதுமக்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்று என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படை கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று முன்தினம் தேசிய பாதுகாப்பு படையின் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை தொடங்கியது. இதனால், 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்தினர். அப்போது, முகமூடி அணிந்து தீவிரவாதிகள் போல் துப்பாக்கி முனையில் அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்தனர். பின்னர், பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அம்மா மாளிகை கட்டிடத்தின் உள்ளே சென்று ஊழியர்களை மீட்பது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது.

இதேபோல, 2-வது நாளாக நேற்றும் சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் ஒத்திகை நடைபெற்றது. இதில், ஹெலிகாப்டரில் வந்த 5-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படையினர் அம்மா மாளிகையின் மொட்டை மாடியில் இறங்கி அங்கு சோதனையில் ஈடுபட்டனர். பின்னர், மொட்டை மாடியில் இருந்து மற்ற பாதுகாப்பு படையினரை தொடர்பு கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.

தேசிய பாதுகாப்பு படையுடன் போலீசார், தமிழ்நாடு கமாண்டோ படை, தீயணைப்புத்துறை, சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, மருத்துவத்துறை என அதிகாரிகள் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் நடைமேடை 11 அருகே உள்ள காலி இடத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்தினர். அப்போது, குறைந்த சத்தம் எழுப்பும் வெடிகுண்டை வெடிக்க வைத்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், வெடிகுண்டு வெடித்து அதனால் பாதிக்கப்படும் நபர்களை எவ்வாறு விரைவாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வது குறித்தும், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டுகளை அப்புறப்படுத்துவது குறித்தும் பயணிகள் மத்தியில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று முன்தினம் ஆரம்பித்த தேசிய பாதுகாப்பு படையின் ஒத்திகை இன்றுடன் நிறைவடைய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்