ரவுடிகள், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடரும்: புதிய போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேட்டி

ரவுடிகள், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று புதிய போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்தார்.

Update: 2023-06-30 23:16 GMT

சென்னை,

தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகித்த சைலேந்திர பாபு நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். அவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் முறைபடி பதவி ஏற்றுக்கொண்டார். அவரது பணி சிறக்க வாழ்த்துகளை கூறி அவரிடம் பொறுப்புகளை சைலேந்திரபாபு ஒப்படைத்தார்.

ரவுடிகள், கள்ளச்சாராயம் ஒழிப்பு

31-வது போலீஸ் டி.ஜி.பி.யாக அரியணையில் அமர்ந்தவுடன் சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்ற கூடிய வாய்ப்பை வழங்கிய முதல்-அமைச்சருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். போலீஸ் துறை பல்வேறு சிறப்பான பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அது மேலும் சிறப்பாக பராமரிக்கப்படும். ரவுடிகள், கள்ளச்சாராய கும்பலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். போலீசார் மற்றும் அதிகாரிகள் நலன் காக்க பல புதிய திட்டம் உள்ளது.

போலீஸ்துறையில் போதுமான போலீசாரை நியமிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள்-போலீசார் நல்லுறவை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப......

போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வருவோர்களின் குறைகளை விரைந்து போக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு விடுமுறை, உடல்நலம் மற்றும் வீட்டு வசதி போன்றவை கிடைக்க வழிவகை காணப்படும். சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறும் இடங்களை அடையாளம் கண்டு, விபத்துகள் மற்றும் விபத்து மரணங்களை குறைக்கவும் முயற்சி எடுக்கப்படும். சென்னை பெருநகரில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். அந்த திட்டங்கள் மாநில அளவிலும் விரிவுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பான பணி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சைலேந்திரபாபுக்கு பிரியா விடை

புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி ஏற்ற சங்கர் ஜிவாலுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி.க்கள் டேவிட்சன் தேவாசீர்வாதம், அருண், சந்தீப் மிட்டல், மகேஷ்குமார் அகர்வால், ஜெயராம் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து கூறினார்கள். அதே நேரத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபுவை உற்சாகமாக வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சைலேந்திர பாபு பயணித்த காரை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி கயிறு கட்டி இழுத்து சென்று பிரியா விடை கொடுத்தனர். கார் மீது மலர்களும் தூவப்பட்டது. அந்த காலத்தில் ஓய்வு பெறும் போலீஸ் உயர் அதிகாரிகளை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அழைத்து செல்வது வழக்கம். அந்த நடைமுறையை பின்பற்றி பாரம்பரியமாக இது போல் காரில் அழைத்து செல்லும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்