தூத்துக்குடியில்போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்பு

தூத்துக்குடியில் நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்று ஓடினர்.

Update: 2023-09-06 18:45 GMT

தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

மாரத்தான் போட்டி

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு சார்பில் எய்ட்ஸ் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 5 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டி நடந்தது. போட்டி தொடக்க நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் பொற்செல்வன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார், காசநோய் துணை இயக்குனர் சுந்தரலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், மாவட்ட திட்ட மேலாளர் அமலவளன், மாவட்ட மேற்பார்வையாளர் மகாராஜ மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

பரிசு

மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி ரோச் பூங்கா சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலக பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஊழியர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக போட்டியில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எய்ட்ஸ், போதை ஒழிப்பு குறித்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்