போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
நாகை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் ஒழிப்பு தினம்
சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவி விமலா தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் உப்பிலி கண்ணன் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலமானது சிக்கல் தெற்கு வீதி, மேல வீதி, மெயின் ரோடு, சிக்கல் முருகன் கோவில் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மது, போதை பழக்கத்திற்கு அடிமையானால் சிந்திக்கும் திறன் குறையும்.
மனச்சோர்வு, ஞாபகம் மறதி, தற்கொலை எண்ணம் உண்டாகும். போதைப்பழக்கம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதில் ஒருங்கிணைந்த மது போதை மறுவாழ்வு மைய ஒருங்கிணைப்பாளர் சுஷ்மிதா உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்
இதேபோல் வேதாரண்யத்தில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது நாகை சாலை, வடக்கு வீதி, கீழ வீதி, மேல வீதி வழியாக சென்று ராஜாஜி பூங்காவில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவுக்கு யாரும் அடிமையாக கூடாது என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு மாணவ- மாணவிகள் கோஷங்கள் எழுப்பினார். இதில் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், அரசு கலைக்கல்லூரி முதல்வர் குமரேச மூர்த்தி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கடலோர காவல் குழும போலீசார் கலந்து கொண்டனர்.
வாய்மேடு
நாகை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரில், தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதலின்படி, தலைஞாயிறு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் தலைஞாயிறில் நடந்தது. ஊர்வலத்தை தலைஞாயிறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வடுகநாதன் (பொறுப்பு) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.