போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சையில் நடந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2023-08-11 21:05 GMT

தஞ்சையில் நடந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சை ரெயிலடியில் இருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுகாலை புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

இந்த ஊர்வலம் காந்திஜிசாலை வழியாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா கலையரங்கத்தை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள புதிய மாநாட்டு மைய கட்டிடத்தில் நடந்தது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுதிமொழியை வாசித்து ஏற்று கொண்டதை தொடர்ந்து தஞ்சையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் மாணவ, மாணவிகளும் உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.

பின்னர் கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறும்போது, இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியானது பொதுமக்களுக்கு போதை பழக்கத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்து போதை ஒழிப்பு மாவட்டமாக மாற்றிட ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்