தோல்பாவை கூத்து மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு
நாகர்கோவிலில் தோல்பாவை கூத்து மூலம் பள்ளி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வை மாவட்ட போலீசார் ஏற்படுத்தினர். இதில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தோல்பாவை கூத்து மூலம் பள்ளி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வை மாவட்ட போலீசார் ஏற்படுத்தினர். இதில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு
குமரி மாவட்ட போலீசார் சார்பில் தோல்பாவை கூத்து மூலம் பள்ளி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார்.
பள்ளி உதவி தாளாளர் ஜார்ஜ் மற்றும் தலைமை ஆசிரியை லிஸ்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். இதில் 7 பள்ளிகளில் இருந்து பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
போதைக்கு அடிமையாக கூடாது
நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
போதையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட முதலில் கவுன்சிலிங் கொடுக்கப்படும். பின்னர் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. போதை பழக்கத்தில் யாரேனும் அடிமையாக இருந்தால் அந்த மாணவர்களை பற்றி தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் அதிலிருந்து நிரந்தரமாக வெளியே வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதை தடுப்பு விழிப்புணர்வை மாணவர்கள் கையில் எடுத்தால் அது முழு வெற்றியை தரும். சாலை போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். விபத்துகளால் ஏற்படும் மரணங்களால் பல்வேறு குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றன. வாகனங்களில் செல்லும்போது சீரான வேகத்தில் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முழு ஒத்துழைப்பு தரவேண்டும்
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கையில் போலீசார் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். போதை பொருட்கள் விற்பனை குறித்து தெரிந்தால் உடனே போலீசாருக்கு மாணவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறைகளின் கனவும் மற்றும் வாழ்வாதாரத்தை கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் அடியோடு அழித்துவிடும்.
கஞ்சா தடுப்பு நடவடிக்கையில் போலீசாருடன் சேர்ந்து பொதுமக்களும், மாணவர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். புத்தகங்களை கையில் எடுக்கும் போது நம் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வாழ்வே மேன்மை அடையும். நமது எதிர்காலத்தை நாம் தான் தீர்மானம் செய்ய முடியும். போதை பொருட்களுக்கு மாணவர்கள் என்றும் அடிமையாகாமல் இருக்க வேண்டும். பெற்றோருக்கும், நாட்டிற்கும் மாணவர்கள் பெருமையை தேடித் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண், நேசமணிநகர் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.