போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஊசூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. ஒரு வாரமாக மாணவர்கள் மருத்துவ முகாம், பள்ளியில் தூய்மை பணி, பனை விதை நடுதல், கிராமங்களில் தூய்மை, சுகாதாரம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.
முகாமின் கடைசி நாளாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் த.பாபு, தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ், பள்ளி பட்டதாரி ஆசிரியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுதாகர் வரவேற்றார்.
மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.