போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பேரணாம்பட்டில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-09 19:28 GMT

பேரணாம்பட்டில் வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போதை பழக்கத்தை ஒழிக்க அனைத்து விளையாட்டுகளையும் விளையாட, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் முன்பாக நடை பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வாகனங்களில் போதை பொருட்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண், சைபர் கிரைம், சைல்டு ஹெல்ப்லைன், பெண்கள் உதவி எண், போலீஸ் அவசரம், தீயணைப்பு அவசரம் மற்றும் இ-மெயில் குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

போலீஸ் நிலையம் அருகில் தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம், நெடுஞ்சாலை, நான்கு கம்பம், லாரி ஷெட், நகராட்சி அலுவலகம் வழியாக சென்று வீ.கோட்டா ரோடு சந்திப்பு சாலையில் முடிவடைந்தது.

பின்னர் 10 அணிகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போலீசார், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சாம் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்