போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
நஞ்சநாடு அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.;
ஊட்டி
ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி) சார்பில், போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கதொரை தலைமை தாங்கினார். ஊட்டி ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பாஸ், என்.சி.சி. அலுவலர் சுப்பிரமணியன், ஹவில்தார் சீனிவாசன் ஆகியோர் பேசுகையில், போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், உடல் நலம் கெடுதல், கல்வியில் பின் தங்குவது, குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன. எனவே, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஆசிரியர் புஷ்பராஜ் வரவேற்றார். முடிவில் ஆசிரியை நளினா நன்றி கூறினார்.