சார்பதிவாளர்-மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் ஆலங்குடி மோட்டார் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-15 18:23 GMT

சார்பதிவாளர் அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகள் மற்றும் கறம்பக்குடி பேரூராட்சியின் எல்லைக்குட்பட நிலங்களின் கிரைய பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. மேலும் வாடகை, கடன் ஒப்பந்த பதிவுகள் மற்றும் திருமண பதிவு வில்லங்க சான்று பெறுவது உள்ளிட்ட பணிகளும் நடைபெறுவது வழக்கம்.

இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாகவும், முறைகேடாக பதிவுகள் நடப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

இதையடுத்து, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் விஜயகுமார் கள ஆய்வுக்கு சென்றிருந்ததால் அலுவலகத்தில் இல்லை. இதனால் ஊழியர்கள், பத்திரப்பதிவுக்காக அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்களிடம் பூட்டிய அறையில் விசாரணை நடத்தினர்.

மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.30 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கள ஆய்வுக்கு சென்ற சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வராததால் அவருக்காக காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இந்தநிலையில் நேற்று மீண்டும் சோதனை நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டின் பூட்டு உடைப்பு

ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இதில், மோட்டார் வாகன ஆய்வாளராக நல்லதம்பி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், ஜவகர் மற்றும் போலீசார் நேற்று மாலை 4.30 மணியளவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்குள் திடீரென புகுந்து சோதனை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி குடியிருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்போது, அவர் குடியிருந்து வரும் வீட்டில், வேறு ஒரு பூட்டு போடப்பட்டிருந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த பூட்டை உடைத்து வீட்டில் சோதனையிட்டனர். இந்த சோதனை இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது. இதில் பணம் எதுவும் சிக்கவில்லை எனவும், சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்