திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2023-06-23 21:00 GMT

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

மாநகராட்சி ஆணையர்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருப்பவர் மகேஸ்வரி. இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 1-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் திருப்பூரை சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் செயலாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஏப்ரல் மாதம் 5-ந்தேதி அவர் திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக தனது முதல் அரசு பணி பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காஞ்சீபுரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆணையராக பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் காஞ்சீபுரத்தில் நகராட்சி ஆணையராக கடந்த 2020-2021-ம் ஆண்டு பணியாற்றினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கிருமிநாசினி வாங்கியதில் முறைகேடு செய்ததாக ஆணையர் உள்பட 5 பேர் மீது காஞ்சீபுரத்தை சேர்ந்த சுடர்மணி என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

வழக்குப்பதிவு

அந்த புகாரின் பேரில் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொரோனா தடுப்பு பணிக்காக கிருமிநாசினி வாங்கியதில் ஆணையர் மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் உள்பட 5 பேர் ரூ.32 லட்சத்து 40 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து ஆணையர் மகேஸ்வரி உள்பட 5 பேர் மீது காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் ஆணையராக பணியாற்றிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி காஞ்சீபுரம், திண்டுக்கல் உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

ஆவணங்கள் சிக்கவில்லை

இதில் திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 1-வது தெருவில் உள்ள ஆணையர் மகேஸ்வரியின் வீட்டுக்கு நேற்று காலை 7.30 மணி அளவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அதேபோல் திருப்பூரில் உள்ள மகேஸ்வரியின் வீட்டிலும், காஞ்சீபுரம் மாநகராட்சியில் வேலை பார்த்த சுகாதார பணியாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

ஆணையர் மகேஸ்வரி வீட்டில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 3.30 மணி வரை நீடித்தது. ஆணையரிடமும் துருவி, துருவி விசாரணை நடத்தினர். 8 மணி நேரம் அவருடைய வீட்டில் சல்லடை போட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியும் முக்கிய ஆவணங்கள், பணம் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது ஆணையர் வீட்டுக்குள் செல்ல மாநகராட்சி அதிகாரிகள் உள்பட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் ஆணையரின் வீட்டில் இருந்தும் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாநகராட்சி ஆணையர் வீட்டில் காலை முதல் மாலை வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்