லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; ரூ.13 ஆயிரத்து 700 பறிமுதல்

திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.13 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் புள்ளம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தி விசாரணை நடத்தப்பட்டது.

Update: 2023-03-15 19:50 GMT

திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.13 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் புள்ளம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தி விசாரணை நடத்தப்பட்டது.

மின்வாரிய அலுவலகங்களில் சோதனை

மின்வாரிய அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதன்படி திருச்சி தென்னூர் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பாலக்கரை, மலைக்கோட்டை, மகாலெட்சுமிநகர் ஆகிய பிரிவுக்குட்பட்ட உதவி மின்பொறியாளர் அலுவலகங்களில் நேற்று மாலை 5 மணி முதல் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னவெங்கடேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த சோதனையில் அந்த அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.13 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

மேலும், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட உதவி மின்பொறியாளர்கள் இன்று (வியாழக்கிழமை) திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

புள்ளம்பாடி

இதேபோல் புள்ளம்பாடியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 5.25 மணி வரை நடைபெற்றது.

சோதனையின் போது, சார்பதிவாளர், தலைமை எழுத்தர், இளநிலை ஊழியர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எந்தவித பணமும் சிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்