அந்தியூர் புதுப்பாளையம் பால் கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடை நீக்கம்
அந்தியூர் புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் மோசடி புகாரால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தியூர்
அந்தியூர் புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் மோசடி புகாரால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முற்றுகை
அந்தியூர் புதுப்பாளையத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். தினந்தோறும் இங்கு சுமார் 700 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் பால் உற்பத்தியாளர் ஊற்றும் பாலின் அளவில் முறைகேடு செய்துள்ளதாகவும், உரிய பணத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல் குறைவான அளவை காட்டி மோசடி செய்ததாகவும் பால் உற்பத்தியாளர்கள் பலர் ரசீதுகளுடன் கடந்த 12-ந் தேதி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை முற்றுகையிட்டார்கள்.
பணி இடை நீக்கம்
இதுபற்றி உற்பத்தியாளர்களிடம் கோரிக்கையை கேட்ட அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூட்டுறவு சங்க துணை பதிவாளரிடம் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில் ஆவின் முதுநிலை மேலாளர் ஆனந்த் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு சென்று, ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர் சங்கத்தின் செயலாளராக வேலை பார்த்து வந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமசாமி (வயது 35) என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர் அவர் மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக கூறி, அவரை பணி இடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உத்தரவிட்டார். இது தொடர்பாக மேலும் சட்ட ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.