அரசியல் காரணங்களுக்காக சிலர் பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்துகிறார்கள்

Update: 2022-06-12 15:23 GMT

சேவூர்:

தமிழகத்தில் தற்போதைய சூழலில் அரசியல் காரணங்களுக்காக சிலர் பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்துகிறார்கள் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

இந்திரன் கோவில்

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரியகுரும்பபாளையம் கிராமத்தில் இந்திரன் ஆலய அறக்கட்டளை சார்பாக ரூ.16 கோடி செலவில் புதிதாக இந்திரன் கோவில் கட்டப்பட உள்ளது. இந்த கோவில் கட்டும் திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதலாவதாக மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவசக்தி யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றது.

இதில் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பா.ம.க. தொடங்குவதற்கு முன்னதாகவே தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்காக குரல் கொடுத்தவர் டாக்டர் ராமதாஸ். மேலும் இம்மானுவேல் சேகரனார் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கட்சி தொடங்கும் முன்பாகவே தீர்மானம் நிறைவேற்றியவர் டாக்டர் ராமதாஸ். தேவேந்திர குலவேளாளர், வன்னியர் இருவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். தேவேந்திர குல சமுதாய அமைப்பினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தவர்களில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. சமுதாயத்தினர் நன்கு படித்து, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் வளர்ச்சிடைய வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். .

சமூக முன்னேற்றம்

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாதி கண்ணோட்டம் அல்லாமல் சமூக முன்னேற்றத்திற்காக அனைத்து அமைப்புகளும் ஒன்றிணையும் பட்சத்தில் வளர்ச்சி உருவாகும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க தயாராக வேண்டும். தேர்தல், அரசியலுக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சிக்காக அனைவரின் உழைப்பும் இருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் அரசியல் காரணங்களுக்காக சிலர் பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்திக்கொண்டு இருப்பதாகவும், ஆனால் பா.ம.க. அனைவரின் ஒன்றிணைப்பை மட்டும் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் சமூக வளர்ச்சி அடைய பாடுபடுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலகபாமா, தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்ற தலைவர் குருசாமி சித்தர், திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆனந்தன், ஜெய்சங்கர், இளைஞர் சங்க பொறுப்பாளர் ஜெயமுருகன், மாவட்ட பிரதிநிதி யுவராஜ், வன்னியர் சங்க பொறுப்பாளர் மாஸ்முருகன், அவினாசி ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேஷ், ஏழுமலை உள்பட கட்சி நிர்வாகிகள், கோவில் அறக்கட்டளை குழுவினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாநில தலைவராக பொறுப்பேற்று திருப்பூர் மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகை தந்த அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் அவினாசியில் சேவூர் சாலை சந்திப்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்களில் பேரணியாக பலர் வந்தனர். சேவூர் அருகே பெரியகுரும்பபாளையம் பகுதிக்கு வந்த அன்புமணி ராமதாசுக்கு தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்