தொழிலாளியை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்

கோத்தகிரி அருகே தொழிலாளியை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் சிக்கினார். கைது செய்யப்பட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-24 21:15 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே தொழிலாளியை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் சிக்கினார். கைது செய்யப்பட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூலித்தொழிலாளி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஈளாடா காந்திநகரை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 43). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி கேரடாமட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை

இதற்கிடையில் சிவகுமாரை கேரடாமட்டம் பிரியா காலனியை சேர்ந்த விஷ்ணு(வயது 25) கொலை செய்து, உடலை பொன்னூர் பகுதியில் புதைத்து விட்டதாக அவரது மகளுக்கு ஒரு பெண் செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியபோது, சிவகுமாரின் மகளுக்கு தகவல் கொடுத்தது விஷ்ணுவின் மனைவி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாக்குமூலம்

இதையடுத்து காரைக்குடியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து கோத்தகிரிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

சம்பவத்தன்று நான் கேரடாமட்டம் டாஸ்மாக் கடைக்கு எனது நண்பரான தங்கபாண்டி(வயது 24) என்பருடன் மது குடிக்க சென்றேன். அப்போது ஏற்கனவே அங்கு மது குடித்து கொண்டு இருந்த சிவகுமாருடன்(வயது 43) குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் சிவகுமாரை தாக்கி பொன்னூர் பகுதிக்கு இழுத்து சென்றோம். பின்னர் அவரை கல்லால் தாக்கி கொலை செய்ததோடு முகத்தை சிதைத்து உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டு தப்பி சென்றோம்.

அதன்பிறகு காரைக்குடியில் பெற்ேறார் வீட்டில் தங்கியிருந்த எனது மனைவியை பார்க்க சென்றபோது குடிபோதையில் சிவகுமாரை கொலை செய்ததை உளறினேன். இதை கேட்ட எனது மனைவி, சிவகுமாரின் மகளுக்கு தகவல் கொடுத்ததால், நான் போலீசில் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

பொதுமக்கள் முற்றுகை

இதையடுத்து அவரது நண்பர் தங்கபாண்டியையும் போலீசார் நேற்று காலையில் கைது செய்தனர். மேலும் தாசில்தார் கோமதி, குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் சிவக்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் அதே பகுதியில் புதைக்கப்பட்டது.

அங்கு கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் அழைத்து வந்திருந்தனர். இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து, அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்