மார்த்தாண்டத்தில்பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்து தப்ப முயன்ற மற்றொரு பெண்பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

மார்த்தாண்டத்தில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நகையை பறித்து தப்ப முயன்ற மற்றொரு பெண்ணை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2022-12-21 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நகையை பறித்து தப்ப முயன்ற மற்றொரு பெண்ணை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

பண்டிகை கால சமயத்தில் வெளிமாநில, வெளி மாவட்ட திருடர்கள் குமரிக்குள் நுழைந்து கைவரிசை காட்டும் சம்பவம் நடந்து வருகிறது. அதன்படி மார்த்தாண்டம் பகுதியில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.

தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்த ராஜப்பன் மனைவி கலா (வயது 55) என்பவர் நேற்று அதங்கோடு பகுதியில் இருந்து பஸ்சில் ஏறினார். அந்த பஸ் வெட்டுமணியை தாண்டி மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கலாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை ஒரு பெண் நைசாக பறித்தார். இதனை மற்றொரு பெண் பார்த்து சத்தம் போட்டார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தியதும் நகையை பறித்த பெண் பஸ்சில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓட முயன்றார்.

மற்றொரு பெண் கைது

ஆனால் பொதுமக்கள் திருடி, திருடி என கத்தி விரட்டி அவரை மடக்கி பிடித்தனர். பிறகு அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட பெண் மானாமதுரை காக்காதோட்டம் முருகன் மனைவி முத்துமாரி (29) என்பது தெரியவந்தது.

கலாவிடம் இருந்து பறிக்கப்பட்ட 5 பவுன் தங்கச் சங்கிலி முத்துமாரியிடம் இருந்து மீட்கப்பட்டது. இதுபோக மேலும் சில நகைகளும் அவரிடம் இருந்தன. எனவே அதுவும் திருட்டு நகைகளாக இருக்கலாமா? என நினைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்