கணபதி,ஜூலை
கோவை கணபதியை அடுத்துள்ள மணியக்காரம்பாளையம் பகுதியில் உள்ளது கல்பனா லே அவுட். இந்த குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (வயது 26). இவர் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (24). இவர் 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இவர்களுடன் தினேஷின் தாய் சுமதி, சகோதரர் திலீப் ஆகியோரும் உள்ளனர். தற்போது பெங்களூருவில் இருந்து சரண்யாவின் தாய் லலிதாம்பிகாவும் வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி இரவு சரண்யா சமையல் அறைக்கு சென்று கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அவருடன் சுமதி, லலிதாம்பிகா நின்றிருந்தனர். இந்த நிலையில் சரண்யா, சுமதி, லலிதாம்பிகா ஆகியோர் மீது தீ பற்றியது.
இதனை அறிந்து அவர்களை காப்பாற்ற அங்கு வந்த தினேஷ், திலீப் ஆகியோர் மீதும் தீ பிடித்தது. இது பற்றி அறிந்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யாவின் தாயார் லலிதாம்பிகா இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் நேற்று முன்தினம் சுமதியும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.