கஞ்சா கடத்தல் வழக்கில் ஆந்திராவை சேர்ந்த மேலும் ஒருவர் சிக்கினார்

விக்கிரமசிங்கபுரத்தில் மினிலாரியில் 100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் ஆந்திராவை சேர்ந்த மேலும் ஒருவர் சிக்கினார்.

Update: 2023-02-11 20:17 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் மினிலாரியில் 100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் ஆந்திராவை சேர்ந்த மேலும் ஒருவர் சிக்கினார்.

கஞ்சா கடத்தல்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியில் மறைத்து கடத்தி வந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த தளவாய் மாடன், இசக்கிமுத்து, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் மறுகால் குறிச்சியை சேர்ந்த செல்லத்துரை ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை, ஆந்திரா பகுதிகளுக்கு சென்று தீவிரமாக தேடி வந்தனர்.

ஆந்திராவை சேர்ந்தவர் சிக்கினார்

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்வேச அய்யா நகர் காஜி வாக்காவை சேர்ந்த பூராஜ் மகன் கலீம் துர்கா பிரசாத் (36) என்பவர் நெல்லைக்கு தனது நண்பரை சந்திக்க வந்தபோது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் கடந்த 7 வருடங்களாக தமிழ்நாட்டில் சேலம், சென்னை, தேனி, கம்பம், மதுரை, தூத்துக்குடி, நெல்லை என பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்து அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.8 லட்சத்தை முடக்கினர்.

மேலும் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ரத்தினம் பட்டா, புன்னகோபால பட்டணம் ஆகிய பகுதிகளில் கஞ்சா தொழில் அதிகமாக நடைபெறுவதாகவும், அப்பகுதியில் உள்ள கோட்டி என்ற கோடீஸ்வர ராவ் என்பவரிடம் தான் ஆட்டோ டிரைவராக பணியாற்றியதாகவும், அவரிடம் இருந்து கஞ்சா விற்பனை செய்வதை கற்றுக்கொண்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இருவருக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக கோடீஸ்வர ராவ் மற்றும் ஒருவர் என மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்