கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

பெரம்பலூர் அருகே கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Update: 2022-07-07 19:32 GMT

கார் மோதி விபத்து

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தல் இந்திரா நகர் பிரிவு சாலை அருகே நேற்று முன்தினம் மதியம் சென்று கொண்டிருந்த கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த கார் சாலையோரத்தில் டயர் பஞ்சராகி நின்ற கார் மீதும் மோதி விட்டு நிற்காமல், அருகே உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் அந்த காரில் பயணம் செய்த தஞ்சை சிராஜ் நகரை சேர்ந்த ஜானி பாஷாவின் மனைவி மேரிஜான் (வயது 65) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அந்த காரில் பயணம் செய்த தஞ்சை சிராஜ் நகரை சேர்ந்த ஜஹாங்கீர் மனைவி ஜீனத்பேகம், ரஹீம் மனைவி மகபூபி, பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு ஆசியா நகரை சேர்ந்த அன்வரின் மனைவி சம்சாத்பேகம், மல்லிகை நகரை சேர்ந்த தவுலத் பாஷாவின் மனைவி சுபேதா பேகம், கார் டிரைவர் பட்டுக்கோட்டை பெரிய கடை தெருவை சேர்ந்த தமிழ்வாணனின் மகன் கிருபாகரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

மேலும் ஒருவர் பலி

பஞ்சராகி நின்ற காரின் டயருக்கு பஞ்சர் ஓட்டிக்கொண்டிருந்த தண்ணீர்பந்தலை சேர்ந்த மெக்கானிக் அருண், அந்த காரில் வந்த சென்னை அண்ணா நகரை சேர்ந்த முனிசாமி, கொளத்தூரை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரும், மோட்டார் சைக்கிளில் வந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, வடபாதியை சேர்ந்த பெரியசாமி (65), நடராஜனின் மனைவி பூபதி (35) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அருண் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெரியசாமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்