நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா
வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா;
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் அமைந்துள்ளது நாட்டு மடம் மாரியம்மன் கோவில். திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் ஒரு மடம் அமைத்து அதில் இந்த மாரியம்மனை வைத்து வழிபாடு செய்ததாக வரலாறு. அதனால் இந்த மாரியம்மனுக்கு நாட்டு மடம் மாரியம்மன் என பெயர் வரலாயிற்று. இந்த மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும், ஞாயிறு, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடும், ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாள் விழா நடைபெறுவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வந்தடைந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதியுலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.