ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா
பெரம்பலூரில் ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.;
பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் எதிரே அமைந்துள்ள ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேக விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 9-வது வருடாபிஷேக விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை மகாகணபதி ஹோமம், சாய்பாபா சிலைக்கு புனிதநீர் அபிஷேகம், வண்ணமலர் அலங்காரம் மற்றும் மகாதீப ஆரத்தி நடந்தது. மாலையில் பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோவிலில் இருந்து முளைப்பாரி, பால்குடம் மற்றும் பாபா திருவுருவ ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து சாய்பாபாவுக்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் இரவு மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபா திருவுருவத்தையும், துவாரகாமயி பாதுகைகளையும் வழிபட்டனர். காலையில் தொடங்கி இரவு வரை அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.