ஆனி திருமஞ்சன தரிசன விழாவை மதியம் 3 மணிக்குள் முடிக்க வேண்டும்
ஆனி திருமஞ்சன தரிசன விழாவை மதியம் 3 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று சிதம்பரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
சிதம்பரம்:
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார். சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், வர்த்தக சங்கம் சிவராமவீரப்பன் மற்றும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள், நகராட்சி, தீயணைப்பு துறை, மின்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மது கடைகளை மூட...
கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவி பேசுகையில், நடராஜர் கோவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்களின் நலன் கருதி மதியம் 3 மணிக்குள் தரிசன நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தேர் மற்றும் தரிசன நாளில் சிதம்பரத்தில் அசைவ கடைகள் மற்றும் மது கடைகளை மூடவேண்டும் என்றார்.