தேசிய வேளாண் நிறுவனத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேசிய வேளாண் நிறுவனத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

Update: 2022-11-16 19:03 GMT

அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை தேசிய வேளாண் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், தேசிய வேளாண் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.ஆர். ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இதுகுறித்து துணைவேந்தர் கதிரேசன் கூறுகையில், இந்தியாவில் பசுமை புரட்சியின் சிற்பியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சி.சுப்பிரமணியத்தால் தேசிய வேளாண் நிறுவனம் தொடங்கப்பட்டது‌. அதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமால் வளர்க்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மறு உற்பத்தி விவசாயம், ஒருங்கிணைந்த வேளாண்மை, இயற்கை வேளாண்மை, வேளாண் வணிக மேம்பாடு மற்றும் விரிவான கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் இரு நிறுவனங்கள் இடையேயான கூட்டு முயற்சிகளை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட்டு முயற்சிகள் மூலம் விவசாயிகள் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்தல், கள ஆய்வுகள், மாணவர் திட்டங்கள் ஆகியவைகள் அடங்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள், கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை தரம் மற்றும் ஆண்டு வருமானத்தை மேம்படுத்த வழி வகுக்கும் என்றார்.

இதில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே. சீதாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், இணை பேராசிரியர் பாபு, தேசிய வேளாண் நிறுவனத்தின் இயக்குனர் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்