அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரம் செய்யாததால்தொகுப்பூதிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சிசக ஊழியர்களுக்கு அனுப்பிய வீடியோவால் பரபரப்பு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரம் செய்யாததால் தொகுப்பூதிய ஊழியர், சக ஊழியர்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-03-28 18:45 GMT


அண்ணாமலை நகர், 

சிதம்பரத்தில் அண்ணாமலை பல் கலைக்கழகம் உள்ளது. இங்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக 205 பேர் தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்தை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வாகன கிளீனராக பணியாற்றி வரும் முத்துலிங்கம் (வயது 42) என்பவர் ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். சிதம்பரம் மீதிகுடி பகுதியில் வசித்து வரும் இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. மிக குறைந்த ஊதியம் பெற்று வந்த இவர், பணி நிரந்தரம் செய்யப்படாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை இவர் செல்போனில் ஒரு வீடியோ பதிவை சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருந்தார்.

மீதி உள்ள குடும்பத்தை காப்பாற்றுங்கள்

அதில், பேசிய முத்துலிங்கம், 13 வருடங்களாக போராட்டமாகவே இருக்கிறது. எத்தனையோ முறை போராடி பார்த்துவிட்டோம், எங்கள் மீது கருணையே இல்லை. பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் சரியாகிவிடும் என்று இருந்தோம். முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அதன் மீதும் பயனில்லை என்பது தான் வருத்தமாக உள்ளது. நாளைக்கு சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையில் தான் ஓடிக்கொண்டு இருந்தோம். தயவு செய்து 204 பேரையாவது பணிநிரந்தரம் செய்யுங்கள். நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம். இது எல்லாம் பாவம். என்னை விட்டுவிடுங்கள். முதல்-அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள். மீதி உள்ள குடும்பத்தையாவது காப்பாற்ற வேண்டும். நன்றி.

இவ்வாறு அதில் பேசி இருந்தார்.

விஷம் குடித்தார்

வீடியோவில் முத்துலிங்கம் பேசும் விதத்தை பார்த்த போது, அவரது நண்பர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, முத்துலிங்கம் எங்கு உள்ளார் என்று தேடி பார்த்தனர். அதில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி மைதானத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சாலை மறியல்

இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு, முத்துலிங்கம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் எங்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், அப்போது தான் கலைந்து செல்வதாக தெரிவித்தனர்.

22 பேர் கைது

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட தொகுப்பூதிய ஊழியர்கள் 22 பேரை போலீசார் கைது செய்து, அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த மறியல் காரணமாக சிதம்பரம்-பிச்சாவரம் சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்