கொட்டும் மழையில் அண்ணாமலை 2-ம் கட்ட பாதயாத்திரை தொடங்கினார்
‘என் மண், என் மக்கள்’ 2-ம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் தொடங்கிய அண்ணாமலை கொட்டும் மழையில் தொண்டர்களுடன் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார்.
கடையம்:
'என் மண், என் மக்கள்' 2-ம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் தொடங்கிய அண்ணாமலை கொட்டும் மழையில் தொண்டர்களுடன் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார்
2-வது கட்ட பாதயாத்திரை
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் தொண்டர்களுடன் பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் முதல்கட்டமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்.
தொடர்ந்து 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பொட்டல்புதூரில் நேற்று மாலையில் தொடங்கினார். மதியம் முதலே மிதமான மழை பெய்தபோதும் அங்கு திரண்டு இருந்த திரளான பா.ஜ.க.வினருடன் அண்ணாமலை பாதயாத்திரையாக புறப்பட்டார். கொட்டும் மழையிலும் அவருக்கு ஏராளமானவர்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
4 கி.மீ. தூரம் நடந்தார்
பொட்டல்புதூரில் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற அண்ணாமலை தொடர்ந்து திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம் விலக்கு, முதலியார்பட்டி வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடையத்துக்கு வந்தார். கடையம் பாரதிநகரில் தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் ஏர்கலப்பையை அண்ணாமலைக்கு பரிசாக வழங்கினர். பின்னர் கடையம் மெயின் பஜார் வழியாக லாலாகடை முக்கு பகுதிக்கு சென்ற அண்ணாமலை பா.ஜனதா கட்சி கொடியேற்றினார். இரவில் தென்காசியில் பாதயாத்திரையை முடித்த அண்ணாமலை, குற்றாலத்தில் தங்கினார்.
அவருடன் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, தென்காசி நாடாளுமன்ற தொகுதி பாதயாத்திரை பொறுப்பாளரும், பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவருமான அ.ஆனந்தன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.