234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்திக்க விரைவில் நடைபயணம் -அண்ணாமலை அறிவிப்பு

‘‘தமிழகத்தில் 2024-ம் ஆண்டு பா.ஜ.க. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றும், ‘‘மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் 234 தொகுதிகளிலும் விரைவில் நடைபயணம் மேற்கொள்வேன்’’ என்றும் சென்னையில் நடந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அண்ணாமலை அறிவித்தார்.

Update: 2022-12-18 18:52 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. கட்சியின் சிறுபான்மை அணி சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா, சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று மாலை நடந்தது. தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, ஆர்.சி.பால்கனகராஜ், சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி தங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோபன் ராமானுஜம், பாதிரியார் ஜெய்சிங், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை அண்ணாமலை வழங்கினார். அதனைத்தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:-

அரசியலில் மதம் கலந்துவிட்டது

1940-ம் ஆண்டு முதல் ஏதோ ஒரு காரணத்துக்காக அரசியலில் மதம் கலந்துவிட்டது. தொடர்ந்து வரும் இந்த நிலை மாற வேண்டும். உண்மையிலேயே மதசார்பின்மை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்காக மட்டும் அந்த மதத்தின் சடங்குகளை ஏற்பது கிடையாது.

தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் நடந்து வருகிறது. அதேபோல் மதங்களை வைத்து அரசியல் செய்யாதவர்களை மதங்களுக்கு எதிரி என பட்டத்தை சூட்டுகின்றனர். இனி வரும் காலங்களில் இந்தியாவில் பா.ஜ.க. தலைவர்கள் அனைத்து மதத்தில் இருந்து வருவார்கள். பா.ஜ.க. ஒரு மதத்துக்கு சொந்தமான கட்சி அல்ல. அப்படி ஒரு மதத்தில் இருந்து தலைவராக வந்தாலும், மக்களிடம் அந்த மதத்தை திணிக்கப்போவது கிடையாது. இது தான் பா.ஜ.க.வின் பலம். இதனை புரிந்து கொள்வதற்கு மக்களுக்கு கொஞ்சம் நேரமாகும். மதசார்பின்மை என்றால் என்ன? என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். சிறுபான்மை, பெரும்பான்மை இதையெல்லாம் தாண்டி நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

234 தொகுதிகளிலும் நடைபயணம்

தமிழகத்தில் திராவிட கட்சிகள் 70 ஆண்டுகளாக மக்களிடம் பொய்யை விதைத்து வைத்திருக்கிறார்கள். அதனை ஒவ்வொன்றாக களையெடுத்து உண்மையை சொல்வதற்கு எங்களுக்கு கொஞ்சம் நேரம் ஆகும். 2024-ம் ஆண்டில் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பா.ஜ.க. ஏற்படுத்தும். நான் கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி. போன்ற பதவிகளை பார்த்தவன் இல்லை. ஆனாலும் சட்டை, வாட்ச், கார் என நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே என்ன விலை? என தி.மு.க.வினர் கேட்கின்றனர். இதை நான் வரவேற்கிறேன். இது நடக்க வேண்டும் என்று தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

விரைவில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நடைபயணமாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறேன். இந்த நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்பாக, நான் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த நாள் முதல் இப்போது வரை எனது முழு வங்கி கணக்கையும் மக்களிடம் ஒப்படைக்க இருக்கிறேன். எனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர் என 300 பக்கங்கள் வரை கொண்ட முழுமையான, ஒளிவுமறைவில்லாத அறிக்கையை நான் வெளியிடுவேன்.

சாதியை வைத்து அரசியல்

நேர்மையான அரசியலுக்காக இதனை நான் செய்வதால் மக்கள் என்னை நம்புவார்கள். தமிழகத்தில் 70 ஆண்டு காலம் சாதியை வைத்து தான் திராவிட அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்