சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
இன்று சந்திர கிரகணம் என்பதால், முன்கூட்டியே சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
கூடலூர்,
இன்று சந்திர கிரகணம் என்பதால், முன்கூட்டியே சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
சந்திர கிரகணம்
கடந்த மாதம் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதையொட்டி அனைத்து கோவில்களின் நடைகளும் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி அனைத்து கோவில்களின் நடைகளும் அடைக்கப்படுகிறது. இந்தநிலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் பவுர்ணமி தினத்தில் சந்திர கிரகணம் நடைபெறுவதால் கூடலூர் பகுதியில் சில கோவில்களில் முன்கூட்டியே அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள முக்கூடல் லிங்கேஷ்வரர் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அன்னாபிஷேகம்
பின்னர் அரிசி சாதத்தால் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணி வரை பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் சில கோவில்களில் அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல் கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் மற்றும் கடைவீதி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவலிங்கத்தில் கேதாரீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மீதமுள்ள முக்கிய கோவில்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.