அண்ணா திடல், கலையரங்கத்தை பராமரியுங்கள்:வால்பாறையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது எப்போது?-பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
வால்பாறையில் அண்ணா திடல், கலையரங்கத்தை பராமரிப்பதோடு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
வால்பாறை
வால்பாறையில் அண்ணா திடல், கலையரங்கத்தை பராமரிப்பதோடு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
போக்குவரத்து நெரிசல்
வால்பாறை பகுதியின் முக்கிய பிரச்சினையாக பல ஆண்டுகள் இருந்து வருவது போக்குவரத்து நெரிசல். வால்பாறை மெயின் ரோடும் குறுகிய ரோடாக உள்ளது. இதனால் வால்பாறை போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகிறது. இந்த நிலையில் வால்பாறை மெயின் ரோட்டில் கடைகள் நடத்துபவர்கள் தங்களின் வாகனங்களை கடைகளுக்கு முன்னால் சாலையில் நிறுத்தி வைக்கின்றனர். உள்ளூர் வாசிகளும், எஸ்டேட் பகுதி மக்களும் வால்பாறை பகுதிக்கு வரும் போது தங்களது வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்து விட்டு பொருட்கள் வாங்க சென்று விடுகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக காட்டி போலீசார் அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் சிக்கிக் கொள்வதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பராமரிக்க வேண்டும்
இதேபோல் வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நகராட்சி அண்ணா திடலை உரிய பராமரிப்பு செய்து நகராட்சி வணிக வளாகமாகவும் அடித் தளத்தில் கட்டண வசதியுடன் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமாகவும் ஏற்பாடு செய்து கொடுத்தால் வால்பாறை பகுதியில் அன்றாடம் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்பது பொது மக்கள் , வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் வால்பாறை நகரில் எந்த ஒரு பொது கூட்டமானாலும், பொது நிகழ்வாக இருந்தாலும் வால்பாறை மெயின் ரோட்டில் உள்ள பழைய பஸ் நிலையம் மற்றும் காந்தி சிலை பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அண்ணா திடலில் உள்ள நகராட்சி கலையரங்கத்தை பராமரிப்பு செய்து நவீன வசதிகளுடன் சீரமைப்பு செய்து கொடுத்தால் பொது நிகழ்வுகள் யாருக்கும் இடையூறு இல்லாமல் நடப்பதற்கு வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள் ெதரிவித்தனர்.