அரசு விடுமுறை அறிவித்தவர் அண்ணா, "விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் ஏன் வாழ்த்து கூறவில்லை? - அண்ணாமலை கேள்வி

முதன் முதலாக விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா, இப்பொழுது இருக்கின்ற தமிழகத்தின் முதல்-அமைச்சர் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. இது கண்டனத்திற்கு உரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2022-09-01 07:48 GMT

சென்னை,

சென்னை, தி.நகரில் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினா. இதனையடுத்து,

சென்னை, தி.நகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதன் முதலாக விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா. இப்பொழுது இருக்கின்ற தமிழகத்தின் முதல்-அமைச்சர் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. இது கண்டனத்திற்கு உரியது. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டேன், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டேன். இதுதான் திமுக அரசு. ஆனால் பாஜக அனைத்து மதத்தினரின் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து, அனைத்து மதத்தினரும் ஒன்று என ஏற்கிறோம்.

அண்ணா வழியில் வரக்கூடிய இந்த ஆட்சி தற்போது வழி தவறியிருக்கின்றது. தமிழக முதல்-அமைச்சராக இருந்து கொண்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதிலிருந்து தவறியிருக்கிறார். தமிழக மக்கள் எதிர்பார்ப்புளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கமாட்டேன் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கிறது என்பது எங்கள் கருத்து.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் தான் மத அரசியல் செய்கிறார். அதைவிட்டு விட்டு பாஜக தான் மத அரசியல் செய்கிறது என்பது முற்றிலும் தவறானது. ஆனால் முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது அவர் தான் மத அரசியல் செய்கிறார் என்பது மறுபடியும் ஊர்ஜிதமாகிறது. பாஜக தான் மத அரசியல் செய்கிறது என்று முதல்-அமைச்சர் சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அறநிலையத்துறை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியதை திமுக எம்.பி செந்தில் விமர்சிப்பதை ஏற்க முடியாது. விநாயகர் சதுர்த்திக்கு இந்து சமய அறநிலையத்துறை வாழ்த்து கூறியதில் தவறில்லை.

இவ்வளவு சமூக நீதி பேசுகிறது திமுக; முதல் பட்டதாரிகள் எத்தனை பேர் திமுகவில் இருக்கிறார்கள்?; அப்படி யாராவது வந்தால் அவர்களை தகாத வார்த்தைகளில் பேசுவார்கள். நாளையே என்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து நான் பிழைத்துக் கொள்வேன். முதலமைச்சராலும், பழனிவேல் தியாகராஜனாலும் இதை செய்ய முடியுமா? அவர்களால் முடியாது. ஆனால் எனக்கு அந்த துணிவும் தைரியமும் இருக்கிறது.

ஐ.டிவிங் மூலம் மிரட்டுவது, அவதூறு பேசுவது திமுகவின் வழக்கமான பாணி. ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது. என்னை அடித்தால் நான் திரும்பி அடிப்பேன். இருமடங்காக அடிப்பேன். மரியாதையான அரசியலை திமுக செய்தால், நானும் அதை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்