சிறுத்தை பிடிபடாததால் அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து விட்டதா?

ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 1 மாதமாக பதுங்கி இருந்த சிறுத்தை பிடிபடாததால் அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து விட்டதா? என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

Update: 2023-04-09 20:04 GMT

ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 1 மாதமாக பதுங்கி இருந்த சிறுத்தை பிடிபடாததால் அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து விட்டதா? என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

சிறுத்தை

ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகிவற்றை இழுத்து சென்று கொன்று தின்றது. இந்த சம்பவம் தொடர்கதையானதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஊதியூர் மலையடிவார பகுதிக்கு செல்லவே அஞ்சினர். எனவே சிறுத்தையை பிடித்துவனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 30 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகிவற்றை வைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த எந்தவித காட்சிகளும் கேமராக்களில் பதிவாகவில்லை. சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டிலும் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது.. மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி சுமார் 1 மாத காலம் ஆனநிலையில் ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ? என்று அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் குழப்பம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ஒரு மாதம்கடந்த நிலையில் சிறுத்தை சிக்கவில்லை. அவ்வப்போது மலையடிவாரப்பகுதியில் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. மாறாக சிறுத்தையின் கால்தடங்கள் மட்டுமே கிடைத்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வனத்துறை வீரர்கள் சிலர் சிறுத்தையை நேரில் பார்த்ததாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறுத்தை வனப்பகுதியை விட்டு வந்து ஆடு மாடுகளை வேட்டையாடவில்லை. சமீபத்திய கால்தடங்களும் கிடைக்க வில்லை. இதனால் எங்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் வழக்கம் போல் இதுவரை வெளியே நடமாட முடியவில்லை. தற்போது ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா? எனவும் சந்தேகம் உள்ளது. இதனால் பெரும் குழப்பம் அடைந்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறுத்தை குறித்த தகவல் இல்லை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வனப்பகுதிக்குள்ளேயே சிறுத்தை பதுங்கி இருந்து அங்குள்ள மான்களை வேட்டையாடி சாப்பிட்டு வரலாம். வனப்பகுதியில் அதற்கு உணவு கிடைக்காமல் போனால் வெளியே வந்து வேட்டையாடலாம். ஆனால் இதுவரை சிறுத்தை வேட்டையாடி சென்றதாக எந்த தகவலும் வரவில்லை. ஒருவேளை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததா? என தெரியவில்லை. அப்படி சிறுத்தை இடம் பெயர்ந்தால் கண்டிப்பாக உணவிற்காக வெளியிடங்களில் வேட்டையாடி இருக்கும். இதுபோன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் எங்களுக்கே குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. எனவே மேலும் 2 அல்லது 3 நாட்கள் பொறுத்திருந்து சிறுத்தை குறித்த ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என்று பார்க்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாராவது சிறுத்தையை பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் என தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்