சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சனம்

சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது.

Update: 2022-07-05 20:02 GMT

ஸ்ரீரங்கம், ஜூலை.6-

சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது.

ஆனி திருமஞ்சனம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது. திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி மாலை 4.30 மணியளவில் கோவிலிலிருந்து அர்ச்சகர்கள் காவிரிகரைக்கு சென்று வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து அதை கோவில் யானை அகிலா மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

அந்த புனிதநீரால் இரவு 7 மணிக்கு சுவாமி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் இரண்டாம் நாளான இன்று (புதன்கிழமை) காலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆனந்த நடராஜர் தரிசனம் நடைபெறும். பின்னர் காலை 9 மணிக்கு சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் வெள்ளிமஞ்சனத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். அதனை தொடர்ந்து ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் நடராஜரும், சிவகாமி அம்மனும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பகல் 12 மணிக்கு திருஅன்னப்பாவடை நிகழ்ச்சியும், மகாதீபாராதனையும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மலைக்கோட்டை

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நேற்று ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இரவு 8.45 மணிக்கு மேல் நடராஜர் உடனுறை சிவகாமசுந்தரி தாயாருக்கு விபூதி, சந்தனம், மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் சிவகாமசுந்தரி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

திருநெடுங்களநாதர்

துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது.

அப்போது உற்சவர்களான நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பால், தயிர், இளநீர்,தேன் பஞ்சாமிர்தம்,பழங்கள், சந்தனம்,விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகமும் நடைபெற்றது. உற்சவமூர்த்திகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் ஆனிதிருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

லால்குடி

லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமத்தில் மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்