சிதம்பரத்தில் கோலாகலம்: நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரத்தில் கோலாகலமாக நடந்த ஆனி திருமஞ்சனத்தில் மூலவரான நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-26 18:45 GMT

சிதம்பரம், 

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தது.

ஏனெனில் இந்த இரு விழாவின் போதும், மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, காலை, மாலை சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதில் மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேர் நேற்று முன்தினம் இரவு 8.20 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

நடராஜருக்கு மகா அபிஷேகம்

பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகிய சாமிகள் ஊர்வலமாக கோவிலுக்குள் சென்று, ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

ஆனி திருமஞ்சன விழா நேற்று அதிகாலை 1 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரணம் அலங்கார காட்சி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்து, 12 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மதியம் 1.30 மணிக்கு கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

அதை தொடர்ந்து மதியம் 2.10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஞானகாச சபாபிரவேசம் (சித்சபைக்கு) புறப்பட்டனர்.

நடராஜர் நடன பந்தலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜ பெருமானே...!, ஓம் நமசிவாய என்று விண்ணை முட்டும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

மதியம் 2.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் வளாகத்தில் பொதுப்பணித்துறை, அய்யப்பா சேவா சங்கம், வன்னியர் அறக்கட்டளை, விஸ்வகர்மா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

முத்துப்பல்லக்கில் வீதிஉலா

இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராமதீட்சிதர், துணை செயலாளர் சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்