மிளகாய் நாற்றுகளை நோய் தாக்கியதால் ஆத்திரம்:விவசாயிகள் சாலைமறியல்-தாசில்தார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மிளகாய் நாற்றுகளை நோய் தாக்கியதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியதால் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2023-07-27 20:35 GMT

மேட்டூர்:

மிளகாய் நாற்றுகள்

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சேத்துக்குழி, வெள்ளக்கரட்டூர். புதுவேலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்ட மிளகாய் நாற்றுகளை நோய் தாக்கி உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தரம் இல்லாத மிளகாய் நாற்று வழங்கிய நர்சரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். மேட்டூர்- கொளத்தூர் சாலையில் 4 ரோடு ரவுண்டானா அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

தாசில்தார் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த தாசில்தார் முத்துராஜா மற்றும் கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நாங்கள் அனைவரும் ஒரே நர்சரியில்தான் மிளகாய் நாற்று வாங்கினோம். எனவே எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்