வேலை கிடைக்காததால் ஆத்திரம் தொழிலாளி மீது தாக்குதல்: ஒருவர் கைது
வேலை கிடைக்காததால் ஆத்திரத்தில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போத்தனூர்
கோவை போத்தனூர் முத்தமிழ் நகரை சேர்ந்த குமார் (வயது 52). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சுந்தராபுரம் சிக்னல் அருகே வேலைக்கு செல்வதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கட்டிட மேஸ்திரி ஒருவர் குமாரை வேலைக்கு வருமாறு அழைத்தார். இதனை பார்த்த அருகே நின்றிருந்த சிலர் உனக்கு மட்டும் தினமும் வேலை கிடைக்கிறது, எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனக்கூறி குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுந்தரபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா (42) என்பவர், குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் குமாருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை தாக்கிய ராஜாவை கைது செய்தனர்.