அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

நெமிலியில் அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-10 17:54 GMT

நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செயலாளர் ராதா தலைமை தாங்கினார். வட்டார தலைவர் விமலா, செயலாளர் ரேவதி, பொருளாளர் லோகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஆர்.வெங்கடேசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி பாராளுமன்றத்தில் அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு கொடுக்கலாம் என்று சட்டம் இயற்றப்பட்ட நாளை கருப்பு தினமாக கருதி கருப்பு பட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு கோரியும், காலி பணியிடங்களை நிரப்பவும், தேக்க நிலை ஊதியத்தை உடனே வழங்கக்கோரியும், ஊழியர்கள் இல்லாத மையத்தை ஒன்றோடு ஒன்று இணைப்பதை கைவிடக்கோரியும், மகப்பேறு விடுப்பு, அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் ஒரு வருடம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் சிவகுமார், செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்