அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.;
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அங்கன்வாடியில் பணிபுரியும் பணியாளர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில் அங்கன்வாடிகளில் கேமராக்கள் பொருத்த கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் ஒரு பணியாளர் 5 மையங்களை சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. அங்கன்வாடிக்கு தேவையான பொருட்கள் வாங்க அரசு அளிக்கும் தொகை மிக குறைவாக உள்ளது.
இதையெல்லாம் சரி செய்யாமல் அங்கன்வாடி பணியாளர்களை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது என்பது ஏற்க முடியாது. எனவே இதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து மாநில தலைமை பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாவட்ட பொதுச் செயலாளர் வாசுகி தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.