கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-26 18:45 GMT

ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசி முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை கோரிக்கைகளை விளக்கி பேசினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள்...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும். இல்லையென்றால் ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் அரசே ஏற்று வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், அதற்கு முன்பு உள்ளூர் இடமாறுதல், மாவட்ட இடமாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கும், 5 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கும் எந்தவித நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். செல்போன் கொடுத்து 4 ஆண்டுகள் முடிவடைந்து பழுது அடைந்த நிலையில், புதிய செல்போன் உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே மினி மையத்தில் இருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு இங்கிரிமென்ட் வழங்க வேண்டும்.

கோஷங்களை எழுப்பினர்

1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கான பதவி உயர்வு வழங்க வேண்டும். திட்டப்பணி தவிர பிற துறை பணிகளை திணிப்பதை கைவிட வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடொன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உணவின் செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசே வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்