சமையல் கியாஸ் சிலிண்டர்களுடன் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சமையல் கியாஸ் சிலிண்டர்களுடன் அங்கன்வாடி ஊழியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-09-26 17:19 GMT

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கன்வாடி மையங்களுக்கு வாங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு பில்லில் உள்ளபடி முழு தொகையை வழங்க வேண்டும். பணியிட மாறுதல் கேட்ட பணியாளர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூருக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

நகர்ப்புற அங்கன்வாடி மையத்துக்கு வாடகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை தாங்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்காக ஏராளமான கியாஸ் சிலிண்டர்களை கொண்டு வந்தனர்.

சிலிண்டர்களை வரிசையாக அடுக்கி வைத்து அதன் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில இணைச்செயலாளர் எம்.நாகலட்சுமி, மாவட்ட செயலாளர் வனிதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சி.நாகலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்