அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி
தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பொள்ளாச்சி
தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கலைநிகழ்ச்சிகள்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து வார விழா ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம் என்பதை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை பேரணி தொடங்கியது.
இதை சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சத்தான காய்கறிகள், உடலுக்கு தீங்கு விளைக்கும் உணவு பண்டங்கள் குறித்து விளக்கும் வகையில் காய்கறிகள் மற்றும் உணவு பண்டங்களை மாலையாக அங்கன்வாடி பணியாளர்கள் அணிந்து வந்தனர். இதில் வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர்கள் பிரேமா, மீனாகுமாரி, சகுந்தலா, பாண்டிசெல்வி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சி நடந்தது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
ரத்த சோகை நோய்
போஷன் அபியான் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம், யோகா, பாராம்பரிய உணவு தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு தானியத்தால் செய்யப்பட்ட உணவு தயாரிப்பவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு ஒன்றியங்களிலும் எடை மற்றும் உயரம் குறைவாக உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் உணவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ரத்த சோகை நோயை தடுக்க அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை கழுவ வேண்டும். குடற்புழு நீக்குதல், இரும்பு சத்துமிக்க உணவு, வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.