அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.;
தூத்துக்குடியில் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஜெபராணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலாவதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரா கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கோரிக்கைகள்
போராட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கோடை வெப்பம் காரணமாக பள்ளி, கல்லூரி விடுமுறை அளிப்பது போல் அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், ஓய்வு பெறும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்க தொகையாக ரூ.5 லட்சம், உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஆர்.பேச்சிமுத்து, துணைத்தலைவர் ரவிதாகூர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.