அங்கன்வாடி கட்டிடத்தை மாற்று இடத்தில் கட்ட வேண்டும்-குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

திருவண்ணாமலை அருகே பனையூர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-06-12 17:36 GMT

திருவண்ணாமலை அருகே பனையூர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி கட்டிடம்

திருவண்ணாமலை தாலுகா அருத்திராப்பட்டு அருகில் உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

பனையூர் கிராமத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலையொட்டி சமுதாயம் கூடம் இருந்தது. அந்த சமுதாய கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் புதியதாக அங்கன்வாடி கட்டுவதற்கு சமுதாயக் கூடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் அங்கன்வாடி கட்டுவதற்கு முயற்சி நடைபெற்று வருகின்றன.

அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் கோவில் அருகில் அந்த கட்டிடம் கட்ட வேலைகள் நடைபெறுவதால் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கோவிலை சுத்திவர இடம் இல்லை. எங்கள் பகுதியில் குடிநீர் டேங்க் அருகில் 0.30 சென்ட் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. எனவே அந்த இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கால அவகாசம் வழங்க வேண்டும்

அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை தாலுகா சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 70 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடுகளை அப்புறப்படுத்த ஆணை பெற்று உள்ளார். எங்கள் வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பாக மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரை எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்