கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர வாலிபர் வெட்டிக்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஆண் பிணம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா அருகே உள்ளது இருங்குளம் காப்பு காடு. இது தமிழக-ஆந்திர எல்லையையொட்டிய தமிழகத்தை சேர்ந்த ஆள்நடமாட்டம் இல்லாத வனபகுதி ஆகும். இந்த காப்பு காட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கும்மிடிப்பூண்டி வனசரகர் சுரேஷ்பாபு பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். தலை, கழுத்து, இடது கால் என பல்வேறு இடங்களில் வெட்டுக்காயத்துடன் காணப்பட்ட அந்த உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அருகே மதுபாட்டில், செருப்பு, கழுத்தில் போடும் உத்திராட்ச மாலை போன்றவை கிடந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஆந்திர வாலிபர்
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், காப்பு காட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அருகே உள்ள நாகராஜபுரத்தை சேர்ந்த தருண் குமார் (வயது 20) என்பது தெரியவந்துள்ளது. தொழில் கல்வி முடித்துள்ள இவரை கடந்த மாதம் 23-ந்தேதி முதல் காணவில்லை.
இது குறித்து 25-ந்தேதி சூளூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் தருண்குமாரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில், வாலிபர் தருண் குமார் தமிழக-ஆந்திர எல்லை காப்பு காட்டுக்குள் கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறிதது இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.