காரில் இருந்து செயின், செல்போன் திருடிய ஆந்திர மாநில வாலிபர் கைது

ஜமுனாமரத்தூரில் காரில் இருந்து செயின், செல்போன் திருடிய ஆந்திர மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-16 16:45 GMT

சென்னை அயனாவரம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்பாபு (வயது 29). இவர் கடந்த 28-ந் தேதி ஜமுனாமரத்தூர் மலைப்பகுதிக்கு சுற்றுலாவுக்காக காரில் வந்தார்.

பின்னர் அவர் அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்றார். அப்போது அவர் தனது தாயின் நினைவாக அவரது தாலிச் செயினை பயன்படுத்தி செய்யப்பட்ட தங்க மோதிரம், செயின் மற்றும் செல்போனை காரில் வைத்து விட்டு சென்றார்.

குளித்து விட்டு வந்து பார்த்தபோது காரில் வைக்கப்பட்டு இருந்த தங்க செயின், மோதிரம், செல்போன் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் செல்போன் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருப்பது தொியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று செல்போனை பயன்படுத்திய நபரை பிடித்த விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், அவரது உறவினர் நெல்லூர் மாவட்டம் தத்தலூர் பகுதியை சேர்ந்த நவீன் (23) என்பவர் கொடுத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து நவீனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் செல்போன், செயின், மோதிரம் திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் அவர் செயின் மற்றும் மோதிரத்தை பெங்களூருவில் உள்ள ஒரு அடகு கடையில் அடகு வைத்ததாக கூறினார்.

பின்னர் அவரை போலீசார் கைது செய்து பெங்களூரு அழைத்து சென்று அடகுகடையில் இருந்து 14 கிராம் எடையுள்ள செயின் மற்றும் மோதிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்