செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வந்தபோது அந்தியூர் எம்.எல்.ஏ. கார் விபத்தில் சிக்கினார்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு வந்தபோது அந்தியூர் எம்.எல்.ஏ. கார் விபத்தில் சிக்கினார். படுகாயத்துடன் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு,
மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று தொடங்கியது. பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றார்கள். இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் இரவு அந்தியூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். அவர் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இரவு 11.30 மணிக்கு ரெயிலில் செல்வதற்காக திட்டமிட்டு இருந்தார். இதனால் அவர் அந்தியூரில் இருந்து ஈரோடு நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார்.
அந்த காரை டிரைவர் கார்த்திகேயன் (வயது 35) என்பவர் ஓட்டிச்சென்றார். காரின் முன் இருக்கையில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உட்கார்ந்து இருந்தாா். பின் இருக்கையில் பர்கூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் அமர்ந்து இருந்தார். இரவில் மழை பெய்து கொண்டே இருந்தது.
உயிர் தப்பினார்
இந்தநிலையில் எம்.எல்.ஏ. சென்ற கார் பவானி அருகே வாய்க்கால்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் கார் திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். கார் தலைகுப்புற கவிழ்ந்த இந்த விபத்தில் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடோடி சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.