ஆவணப்படுத்தப்பட்ட பழமையான கல்வெட்டு
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கல்லூரி மாணவி ஆய்வு
போடிப்பட்டி
மடத்துக்குளத்தையடுத்த பெருமாள் புதூர் குமணன்துறையில் உள்ள பழமையான கல்வெட்டு குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கல்லூரி மாணவி ஆய்வு செய்துள்ளார்.
வரலாற்றுச் சின்னங்கள்
ஆன் பொருநை எனப்படும் அமராவதி ஆற்றங்கரை நாகரிகம் பழந்தமிழர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ள கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட கிராமங்கள் கரைவழிநாடு என்னும் பெயர் பெற்றுள்ளன. அந்தவகையில் கரை வழி நாட்டுக் கல்லாபுரத்துக்கு முந்தைய பெயர் விக்கிரம சோழ நல்லூர் என்பது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கல்லாபுரம்-பெருமாள்புதூருக்கு இடையில் உள்ள பொன்னிகாட்டுத்துறைக்கு செல்லும் வழியில் கொம்மே கவுண்டன் துறை என்னும் குமணன் துறை உள்ளது. இந்த குமணன் துறையே வழக்காற்று சொல்லில் கொமணான் துறை என்று மருவி மாறி விட்டது.
இந்த குமணன் துறைக்கு அருகில், ராசவாய்க்காலில் உள்ள 8 அடி நீளமும், 2 அடி அகலமும் படுக்கை வாய்ப்பில் உள்ள கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம சோழ தெவற்கு என்று தொடங்கி 22 வரிகளில் கரைவழி நாடு எனவும், விக்கிர சோழ தெவற்கு எழுதிய எழுத்து எனவும் முடிகிறது. இதில் பல எழுத்துக்கள் சிதைவடைந்திருந்தாலும், நில தானத்தையும், விக்கிரம சோழனின் பெயரையும் ஆண்டையும் தெளிவாக தெரிவிக்கிறது.
நில தானம்
இந்த கல்வெட்டில் விக்கிரமசோழன் என்பது 12-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்கிரம சோழனை குறிப்பதாகவும், கல்லாபுரத்தின் முந்தைய பெயரான விக்கிரம சோழ நல்லூர் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த கல்வெட்டு போரின் சேதத்தை குறிப்பிடுவதாகவும், அதற்கு நிவர்த்தி செய்வதாகவும் குறிப்பிடுகிறது. கரைவழிநாட்டின் ஊரின் பெயர்களையும், திருக்கோவிலுக்கு விடப்பட்ட நிலதானங்களிலிருந்து வரும் வரியினங்கள் சார்ந்த வருவாய்களையும் குடிமக்கள் குறித்தும் கூறுகிறது.
வீரசோழன் காலத்தைய கல்வெட்டு கண்டராதித்த செட்டி, கண்டிய தேவன், நெல் தானம் செய்தது குறித்தும், நிலங்களின் இருப்பிடம் குறித்தும் அதன் சுற்றுப்புற எல்லைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. வீரசோழநல்லூர் கல்லாபுரம் பகுதியில் கந்தன், அடியன், வளவினன் என்னும் உடையானுக்கு நிலதானம் செய்தது குறித்தும், அந்த நிலத்தை அடையாளப்படுத்தும் வகையில் சுற்றுப்புற நிலங்களின் பெயர்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. கரை வழிநாடு குறித்தும், கரை வழி நாட்டின் கல்வெட்டுகள், பாரம்பரியம், விவசாயம் குறித்தும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரின் களப்பணி வாயிலாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.உடுமலை ஜிவிஜி பெண்கள் கல்லூரி வரலாற்றுத் துறை 2-ம் ஆண்டு மாணவி அறிவரசி இந்தக் கல்வெட்டினை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளார்.