சென்னையை அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் ஒரே அகழாய்வில் 4 நாகரிகங்களை பிரதிபலிக்கும் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு

சென்னையை அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் ஒரே அகழாய்வில் 4 நாகரிகங்களை பிரதிபலிக்கும் கல் கருவிகள், ஆபரணங்கள், கலைப்பொருட்கள், மணிகள் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-09-24 08:44 GMT

சென்னையை அடுத்த ஒரகடம் அருகே உள்ள குருவன்மேடில், மனித உடலை அடக்கம் செய்யும் பழங்கால புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்துக்கும் பண்டைய கால நாகரிகத்துடன் நீண்ட நெடிய தொடர்பு இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில், வரலாற்று மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆர்வலர்கள் பல்வேறு ஆண்டுகளாக அங்கு தீவிரமான தொடர் கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன் நீட்சியாக, தொல்பொருள் ஆராய்ச்சி துறை வடக்குப்பட்டு கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்யத் தொடங்கியது. தரை தளத்தில் இருந்து சில சென்டிமீட்டர் தோண்டத் தொடங்கியதும், வரலாறு மற்றும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அடுக்குகள் பிரதிபலிக்கத் தொடங்கின.

ஆபரணங்கள், மணிகள், உடைந்த வளையல்கள், பானை ஓடுகள், நாணயங்கள், மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடுத்தடுத்து, கிடைக்கத் தொடங்கி பரவசத்தை ஏற்படுத்தின.

கீழடி, கொடுமணல் போன்ற இடங்களில் அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டதை விடவும் வித்தியாசமாக, அதாவது சங்க காலத்தின்போது கையால் தயாரிக்கப்பட்ட மேற்கூரை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, கற்களை குடைந்து செய்யப்பட்ட பல்லவர்கள் காலத்தைய சிவலிங்கம் மற்றும் விஷ்ணு சிலைகளும் வெளிக்கொணரப்பட்டு உள்ளன.

அந்தவரிசையில், அகழாய்வு நடந்த குழியில் 75 செ.மீ. ஆழத்தில், விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல்லால் ஆன வித, விதமான கருவிகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அவை இடைக் கற்காலத்தில் அதாவது பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடையேயான காலக்கட்டத்தில் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கண்டறியப்பட்டு உள்ளது.

கல் கருவிகள் தயாரிக்கும் இடமாகவும் அது செயல்பட்டு வந்தது தெரியவந்திருக்கிறது. அகழாய்வில் ஒரே குழியில் கிடைத்த பழமையான பொருட்கள், ஆபரணங்கள் ஆகியவை பல்லவர்களின் காலம், சங்க காலம் மற்றும் இடைக் கற்காலம் உள்பட 4 நாகரிங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

இதுகுறித்து, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் எம்.காளிமுத்து கூறுகையில், ''நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு பிறகு இடைக் கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் வடக்குப்பட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணக்கிடப்படுகிறது.

அகழாய்வு நடத்தப்படும் ஒரே குழியில், 4 வெவ்வேறு காலங்களை பிரதிபலிக்கும் வகையில் கல்லால் ஆன கருவிகள், கலைப்பொருட்கள், ஆபரணங்கள் கிடைத்திருப்பது தனித்துவமாக இருக்கிறது. வெவ்வேறான வடிவங்களில் கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அங்கு அதிகப்படியான மக்கள் வாழ்ந்ததை காட்டுகிறது'' என்றார்.

அகழாய்வில் கிடைக்கப்பெற்ற புதிய ஆதாரங்கள் மூலம் வடக்குப்பட்டு கிராமம் தற்போது, கலாசாரம் மற்றும் தொல்லியல் ரீதியில் முக்கியத்துவம் பெற்று தமிழக வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

அடுத்தடுத்து நடைபெறும் அகழாய்வில் மேலும் பல்வேறு பழமையான பொருட்கள் கிடைத்து, தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அதற்கான ஆயத்த பணிகளை தொல்பொருள் ஆராய்ச்சி துறை மேலும் தீவிரமாக வரும் நாட்களில் மேற்கொள்ள உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்