மீன்பிடிக்க சென்ற வள்ளங்களில் சிக்கிய நெத்திலி மீன்கள்

குளச்சலில் மீன்பிடிக்கச் சென்ற வள்ளங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. அவற்றின் விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

Update: 2023-06-13 18:45 GMT

குளச்சல்:

குளச்சலில் மீன்பிடிக்கச் சென்ற வள்ளங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. அவற்றின் விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

வள்ளம் மீனவர்கள்

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு கடல் பகுதிகளில் அலைகள் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.

கடந்த 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை விசைப்படகுகளுக்கு 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால், வள்ளம், கட்டுமர மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மீன்பிடிக்கச் சென்ற வள்ளங்கள், கட்டுமரங்கள் பாதியிலேயே கரைக்கு திரும்பின. இதன் காரணமாக குளச்சலில் துறைமுகத்தில் மீன் வரத்து குறைந்து காணப்பட்டது.

நெத்திலி மீன்கள்

இந்த நிலையில் நேற்று காலை முதல் குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று சற்று தணிந்து காணப்பட்டது. இதையடுத்து வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவ்வாறு சென்ற மீனவர்களின் வலைகளில் ஏராளமான நெத்திலி மீன்கள் பிடிபட்டன. அவற்றை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

விலை வீழ்ச்சி

அதன்படி ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விலை போனது. கடந்த சீசன் காலங்களில் ஒரு குட்டை நெத்திலி மீன்கள் ரூ.2 ஆயிரம் வரை விலை போனது.

நெத்திலி மீன்கள் அதிகளவில் கிடைத்தும் விலை வீழ்ச்சியால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் கவலையடைந்தனர். விலை வீழ்ச்சி காரணமாக சில மீனவர்கள் நெத்திலி மீன்களை கருவாட்டிற்காக கடற்கரை மணற்பரப்பில் உலர வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்