விக்கிரவாண்டிஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி தொடர்ந்து வரும் புகார்கள்இதுவரை 7 வழக்குகள் பதிவு

விக்கிரவாண்டி ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.;

Update: 2023-02-18 18:45 GMT


விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் சிலர் மாயமானதாக பரபரப்பான புகார்கள் எழுந்தன.

இதுவரை திருப்பூரை சேர்ந்த ஜாபருல்லா, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலப்பாகுளம் பாரதி நகரை சேர்ந்த சிவசங்கரனின் மனைவி லட்சுமியம்மாள், அவரது மகன் முத்துவிநாயகம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த நாடிமுத்து மனைவி பத்மா, புதுச்சேரி தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த நடராஜன் ஆகியோர் காணவில்லை என கெடார் போலீஸ் நிலையத்திற்கு வரப்பெற்ற புகார்களின்பேரில் மாயமான வழக்குகளின் அடிப்படையில் மொத்தம் 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

தொடரும் புகார்கள்

இந்நிலையில் அன்புஜோதி ஆசிரமத்தில் கடந்த 1.5.2022 அன்று சேர்த்த மரக்காணம் அருகே பிரம்மதேசத்தை சேர்ந்த காளிதாஸ் (வயது 60) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் காணவில்லை என்று அவரது மகன் இளங்கோ நேற்று கெடார் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் 5-வதாக ஆசிரமம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலு அளித்த புகாரின்பேரிலும், கொல்கத்தாவை சேர்ந்த பெண் அளித்த புகாரின்பேரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இதுவரை மொத்தம் ஆசிரமம் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் காணாமல் போனவர்கள் பற்றி தினந்தோறும் போலீசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதன்படி இன்னும் பலர் காணாமல் போயிருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே இந்த ஆசிரமத்தில் யார், யாரெல்லாம் மாயமாகியுள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்