பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரி பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன. பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள 9 அணைகளில் பரம்பிக்குளம் அணை அதிக கொள்ளளவு கொண்டது. இந்த அணை ஒருமுறை நிரம்பி விட்டால் ஒரு ஆண்டுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் பிரச்சினை இருக்காது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த அணையின் 3 மதகுகளில் நடுவில் உள்ள மதகில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் 20 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் அணையில் இருந்து வெளியேறி கேரளா வழியாக சென்று அரபிக்கடலில் கலக்கிறது. இந்த அணையை தமிழக அரசு பராமரிப்பு செய்து வருகிறது. அணை பராமரிப்பில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கூறியதாவது:-
பரம்பிக்குளம் அணையின் உயரம் 72 அடி. சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் பரம்பிக்குளம் அணை முழுவதும் நிரம்பி இருந்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்தனர். இந்த நிலையில் அணையில் உள்ள 3 மதகுகளில் நடுவில் உள்ள மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே அணை பராமரிப்பில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதகை உடனே சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி கூறும்போது " ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு போவதற்கு காட்டிய அக்கறையை, அணையை பராமரிப்பதில் காட்டி இருக்கலாம். அணையின் மதகு உடைந்த சம்பவத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அணைகளில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.